<< November 2009 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
01 02 03 04 05 06 07
08 09 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30




Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:


rss feed

Blogdrive


Wednesday, May 19, 2004
சமீபத்திற் படுத்தியவை

விற்பவன் கண்களை வெறுமனே வைத்துக்கொண்டு
பிடித்ததென்றும் பிடிக்காததென்றும்
காய் பிரிப்பதும் வெகுசுலபம்.

விற்பவன் கைகளை விடாமற் பிடித்துக்கொண்டு
பிடித்ததைப் பிரித்துக்காட்டென்று
வலி புழிவதும் வெகுசுலபம்.

விற்பவன் வாயை வேர்நிமிண்டிக் கிண்டி
பிரித்ததைப் பகுத்திரென்று
மயிர் பிளப்பதும் வெகுசுலபம்.

எங்கும் நுள்ளிக்கொண்டவன் வெல்கிறான்.
நுள்ளலுக்கும் மேலாம்,
பிரிப்பதும் புழிவதும் பிளப்பதும்.

விதிவிலக்கின்றி
விற்பவர் வெளியில் வழியில்
விக்கித்திருக்கும் காலம்,
அகாலம்.

-/.

~19 May 2004 Wed. 21:06 CST


Posted at 07:04 pm by peyarili
Comments (3)

Thursday, May 13, 2004
தளையுறாததும் தலைப்புறாததும் IX

அடுத்தாள் அடிப்பதற்காய் வாயில்
புடைத்துப் பருத்திருக்கிறது ஆராய்ச்சி மணி.
குலைக்காவேளையிற் குட்டிநாய்
பாதிக்கண் பொருத்தி படுத்திருக்கும்.
"உருக்குருக்கி ஒலியுரு வடித்தவன் யார்? - ஓசைப்படாது,
என் வாயில் தூக்கிக் கொழுவி முடித்தவன் யார்?"
கூறாமல், அடுத்தாள் தான் முன்னாள் முடித்த
பிடித்த நேரத்தில் முடிப்பிழுத்திழுத்து
அரற்ற அடிக்க வகை புடைத்திருக்கும்
என் வாசல் ஒரு மழுக்கு பழமுருக்குமணி.
முருக்கம் கதியால் வெறுமுதுகு இழுத்துக்கிழிப்பதுவாய்
போவான் வருவாள் பொல்லாப்புக்கெல்லாம்
என் வாயில் இழுத்து அடிப்பார் வாயிலெல்லாம்
உருக்கி வடித்து உருக்காவிக் கொணர்ந்து கொழுவார்
எனது வாயில் இழுத்தழுத்து அடித்துப்போவதினாற் பொழுது
இல்லாமலே நிம்மதியாய்க் காயும் ஏதுமின்றி அரற்றுமணி.

-/.
~13 மே 2004, வியாழன் 04:53 மநிநே.


Posted at 02:58 am by peyarili
Comments (4)

தளையுறாததும் தலைப்புறாததும் VIII

பொறி தின்னத் தின்ன பூதமாய்ப் போகிறது புத்தி
போக்கிடமில்லாமல் போகும் பொறியெல்லாம்
பொத்தியும் பொறிந்தும் புகுந்துபோகிறது.

நிலை நெளியும் புத்திக்கு
நிலவு எரியும்; நிழல் நெரிக்கும்;
அவியும் கண்; அலையும் கை.
அள்ளிய பிடியிற் கிள்ளிப்போடும் வாய்.
அவதி தள்ளி கொள்ளப் பிடித்தைக் கொட்டி,
பொறிகீறி நன்னிநன்னி நாசி நுனி நனைந்து
அடுத்த பிடிக்குத் தேடியலையும் அடையாப்புதிது.

ஆகுதலது என்றன்றி ஆகாதிது என்றின்றி
எக்கி எக்கி எல்லாம் சமியத் தின்னும் ஏட்டுப்புழு;
உட்சாரம் செரியும்; உடன் சாராதது கழியும்.

பாற்பல் பருக்கும் புழு
பழுக்கும்; வெடிக்கும்.

பிளந்து தொலைந்த பாதப்பதிவுத் தடத்தே
பொறி தின்னப் புகும் புதிதோர் புழுப்பிஞ்சு.

-/.
~13 மே 2004, வியாழன் 04:14 மநிநே.


Posted at 02:16 am by peyarili
Make a comment

தளையுறாததும் தலைப்புறாததும் VII

என்னைக் கேட்டால் எல்லார் எழில்
இரவுகளையும் பறித்துக்கொள்வோமென்பேன்.

கூடை கிள்ளிய பூவையும் கிணறு அள்ளிய நீரையும்போல்,
அனைவரின் மெல்லா இரவுகளையும் மேல் மேலாய்க்
குவித்து மலையாய்ப் போடுவோம் வா முடிச்சு.

தெரிகின்ற எல்லா விழிகளெல்லாம் இடித்துக் காயட்டும் கடிவெயில்;
என்னைக் கேட்டால், இன்றும் சொல்வேன்; என்றுந்தான் -
மதி தணிக்கின்ற விழி துளிர்க்கும் மது இரவு வேண்டாம்;
எரிகின்ற விழிகள் மட்டுமே எழவென்று, நிலை மாறாமல்
நெருங்கதிரலையும் பகல் பொருந்தப் பொருதிப் பொருதி
எல்லார் பொல்லா இரவுகளையும் பறித்துக்கொல்வோமென்பேன்,
என்னைக் கேட்டால் நீ இன்றைக்கும் இனி என்றைக்கும்

-/.
~13 மே 2004, வியாழன் 03:44 மநிநே.


Posted at 01:46 am by peyarili
Comments (2)

தளையுறாததும் தலைப்புறாததும் VI

கிள்ளிப்போட்டாலும் உள்ளியாய் மணக்கிறது
ஊர்ச்செய்தி - அள்ளிப்போட்ட அயலான்
தேசத்துப்பூக்கூட்டைக்குள்ளும் அவியக் கவிய.

ஒட்டிப்போன பிறப்பினையும்
வெட்டிப்போன இருப்பினையும்
ஒட்ட ஒட்டத் திரியும் முட்டாள்
என் தொழில் - ஊசிக்காதுக்குள்
காலகல் ஒட்டகம் போக்காட்டலே
என்றாரை ஒதுக்கி ஒதுக்கி
வெட்டின பிறப்பினையும்
ஒட்டின இருப்பினையும் - ஊசி
குத்தித் குத்தித் தைத்திருந்தேன்
ஊறி நையும் நாறற்கைத்துணி.

கார உள்ளி மணக்கும் போதெல்லாம்
மழைச்சாரற்கேங்கு ஒட்டகப்புத்திக்கு
உள்ளுவதெல்லாம் ஓரல் ஊசித்துளை.

-/.
~13 மே 2004, வியாழன் 03:24 மநிநே.


Posted at 01:27 am by peyarili
Make a comment

தளையுறாததும் தலைப்புறாததும் V

நகரா நட்சத்திரங்களைக் கற்றுக்கொள்ள
நாள் பார்த்திருக்கிறேன் நான்.

கைவீசி எறிந்த வெளியில் வேறெப்போதோர்
வாளைக் கைதூக்கிய வேளையிலே வேலையிலே
தொலைத்த நட்சத்திரத்தைத் தேடும் தொழிலும்
ஓடி வந்து ஒட்டிக்கொண்டதென் ஓரப்பையுள்ளே.

மிச்சப்பரப்பெல்லாம் மினுங்கித் தொலைந்தபின்னால்,
மொச்சைக்கொட்டையாய் மின்னித் தவிக்கிறது உடுமொட்டு
என்னை எண்ணிக்கொள் எண்ணிக் கொள்ளென்று.

அப்பப்போ பெய்ய அடைமழைக்குட் தலை ஒளிந்தபின்னும்
சத்தம்போட்டென் சாரற்சன்னலைத் தட்டும் சின்ன நட்சத்திரத்தின்
சன்னப்பாட்டின் சாரீரம் பின்னாலே
குடைந்த கிடங்கு குவியக் கவிந்து
சடங்கிருக்கிறது என் அம்மாவின் ஊர்.

எண்ணிக்கொள்ளும் வேளையிலே 
எழும்பி வரலாம் என்னைக் கண்டு
"இன்றாவது வந்தாயோ" என்று வழி.

நடுங்க நடுங்க நனைவேன்
நகராமற் பால்.

-/.
~13 மே 2004, வியாழன் 03:13 மநிநே.


Posted at 01:15 am by peyarili
Make a comment

தளையுறாததும் தலைப்புறாததும் IV


வேடனைப் போலோர் வேடம் கொள்ளும் வேளையிது

காலையும் மாலையும் கண்ணியும் கல்லும்
கோணியும் கொண்டலையும் கோரவனமானது
இவ்விராட்சதத்தேசம்.

தேகமும் தேடலும் எதேஷ்டமென்றிராமல்
தின்னப் புள் நாடி தின்னு புலி தள்ளி
விரித்த கண்ணியின் விழிகண்ணெல்லாம் கச்சிதமாய்
பனி நுனித்த பசும்புல் மெல்லப் பறியும்
கலையும் கற்றே வாழலிவ்வூழெனக்
களைக்கக் களைக்கக் கலைக்கும் வேளை.

தேரத் தின்னா ஆதிவேடன் உள்ளானாயினும்.
ஆகாரம் உண்ணா வேடன் என்பான் இல்லான்.
வேடம் வேடனைப் போலாகும் வேளையாம் இது.

-/.
~13 மே 2004, வியாழன் 02:58 மநிநே.


Posted at 01:00 am by peyarili
Make a comment

தளையுறாததும் தலைப்புறாததும் III


ஒரு பொசுங்கு தனிப்பூனைமயிருக்குள்
நெடி சிலுப்பி நிலை சுருக்கி நசித்துப்போனவர்களை
நினைத்துப்பார்க்கும் நேரமும் வருமாம் எனக்கு.

தேவாங்குத்தேசத்தின் அலவாங்குப்புதல்வர்களின்
அழுத்தலுள்ளும் வருத்தலுள்ளும் அப்பப்போ
பூனைமயிர் பொசுக்கிப் போனார் புறப்பட்டுப்
புற்றுயிர்த்து வருவார் நான் போம் வழி பார்த்து.

அகப்பட்ட சங்கிலிக்குக் கண்சிமிட்டுவார்
புதைபட்ட கூண்டுக்குப் பூப்பெய்வார்; பொழிலென்பார்
காற்றுக்குழாயுள்ளே கலந்தூற்றுவார் கசப்புத்திராவகம்
பேச்சும் மொழியும் பொசுக்கத் தம் வருத்தம்
பூத்தான் ஒருத்தனைப் பார்த்தாலே பொங்கும்
பூரிப்போடு போய் மறைவார் பூத்த புற்றிலோ
புதிதாயோர் புழு பூரும் பொல்லாச்சந்திலோ

அடுத்த வேளையும் எங்கென்றில்லாது
கூண்டு காண மீண்டு தேர்ந்தெழுவார்
என் தேரோடும் வீதி.

-/.
~13 மே 2004, வியாழன் 02:51 மநிநே.


Posted at 12:50 am by peyarili
Make a comment

தளையுறாததும் தலைப்புறாததும் II

கடற்காற்று கனத்துக் கல்லாய்க் கண் தூங்கும் கழுத்தழுத்த,
சகதிச்சேறாய்ச் சீறி நாறும் சீழ்ச்சாமம் இன்றும் எனது.
சிறுநண்டேறத் தடமாகி சைக்கிளும் நானும்
சாய்ந்தே கிடக்கும் சன்னமண்ணும் தூங்கும்
தனி மின்னல் மட்டும் எண்ணி எண்ணித் துணை
இந்தப்பக்கம் ஒரு முறை அந்தப்பக்கம் மறுமுறை
விரைபாம்பு வீதிக்குள் வேரோடி ஒளியும் வெண்ணிலா.

முடிகின்ற நிலம் எல்லாத்துக்குமாய் முடி நீட்டிக்கிடக்கிறது முழு நிலவு
அப்பப்போ, அறுகின்ற கதிருக்கும் உதிர்கின்ற நெல்லுக்குமாய் ஓங்கி
உப்பி உமிழ்ந்துவிட்டுப்போகிறது ஒளி ஒரு துளி
கறுத்துப்போன வெயிற்காட்டுத்தேகத்துக்கு மழையடித்து மினுக்கிற நிலவுக்கும் முகமிருட்ட
வடித்து அடி மறைத்து நாசிமூசித் தலையாட்டும் இரட்டைத்துளிர் மொட்டைக்கிளையின்
கீழோர் தோலுதிர் குட்டிச்சுவரில் தணலள்ளி நெருப்பைத் திமிரத் தின்ற மரநெஞ்சில் மட்டும்
"இன்னும் ஏன் வரக்காணோம்?!"

வாழ்ந்த சொற்சொட்டும் வழித்தின்று அழிந்தானை வாயகட்டித் தின்றதெது?
கத்துங்கடலோ? கனக்குங் காற்றோ? கால்பாவாக் காரிருளோ?
நாளைப் பத்திரிகையும் நடிக்கும் தெரியாது நடப்பென்று.


Posted at 12:38 am by peyarili
Make a comment

தளையுறாததும் தலைப்புறாததும்

எல்லா விழிகளுக்கும் எரிந்துகொண்டிருக்கின்றேன்;
என் விழி மட்டும் இன்னும் தொடர வழிகிறது அடர் இருள்;

காற்றுன் தோணியிலே கடந்துகொண்டிருக்கின்றேன் காலத்தை;
சொரிந்த தினங்கள் புலம்பற்சருகுகளாய்
பொய்த்து அலைகின்றன போம் வழியில்.
தொட்டுக்கொள்ள எகிறும்; மறுகும்
எக்கணத்தும் துவளும்; மெல்லத் தூள்.

எரிந்த குப்பையெல்லாம் எடுத்து அடுக்கிக் கிடுக்கிப்பிடியில்
கிடத்தி வாசித்துக்கொண்டிருக்கின்றது கிழக்காலம் பல்லால்.
என்னையும் இனம் கண்டு
தின்னென்றது, "உன் பங்கு."

ஆங்கே அலைந்த நிழல்கள் கொஞ்சம் அசதிவசமாய்
அகப்பட்டுக்கொண்டதென் கோழிக்கால்களுள்;
வனங்களின் செறிவும் வழிகளின் புல்லும்
வரி கலந்ததாய்க் கசியும் மிதியும் நிழலும்
மருளும் அழியும் மலமாய்க் கழியும்.

அலைய அலைய அமிழும் தோணி.
அலையின் கீழே ஆழமாய் ஆழி.
அகல, களி.

-/.
~13 மே 2004, வியாழன் 02:14 மநிநே.


Posted at 12:22 am by peyarili
Make a comment

Previous Page

Next Page